இந்த எளிய சிகிச்சைகள் உடலைப் புத்தாக்கம் செய்வதோடு, நாட்பட்ட வியாதிகளையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது என சில பெரியோர்கள் சொல்லக் கேள்விப்பட்டு அதனூடே சில காலங்கள் பயணித்துப் பார்த்தேன். என் சொந்த அனுபவத்தில் அதன் பலன்கள் வியப்பூட்டக் கூடியதாக இருந்தது.
இங்கே சத் தர்சனத்தில், இதுபோன்ற கழிவு நீக்கப் (Detoxification) பரீட்சார்த்தங்களை சற்றே ஆழமாக அவதானித்துப் பார்த்ததில் அதன் பின்புலத்திலிருந்த உடல் மனம் சார்ந்த சில சூட்சுமங்கள் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்கதாகவும், அசாத்தியமான நல்விளைவுகளைக் கொண்டதுமாக இருந்தது.
அதை இவ்வாறுமிகச்சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.
சமீப கால ஆய்வுகளில் ஏறத்தாழ அனைத்து மாற்று மருத்துவ முறைகளும் முக்கியமாக இயற்கை வாழ்வியல் முறைகளும் ஒருங்கே ஏற்றுக் கொள்வது “ உடலில் தேங்கும் கழிவே நோயின் தோற்றுவாய்” என்பது.
கழிவு எவ்வாறு தேங்குகிறது..?
உணவு தேடுதலுக்கான சிறு ஓட்டத்தை, உடல் சார்ந்த சவாலை, உழைப்பை எல்லா உயிர்களுக்கும் பொதுவாகவே வைத்திருக்கிறது இயற்கை. ஆனால் மனிதன் இதிலிருந்து நழுவிப் பல காலங்களாகிவிட்டது.
உடலசைவு அல்லது உடல் உழைப்பு குறையக் குறைய, அதற்க்கேற்றாற்போல் உணவு உட்கொள்ளும் முறையைக் கவனித்துப் பார்த்து மாற்றிக் கொள்ளத்தவறியதால், சரிவர எரிபடாதகழிவுகள் உடலில் தேங்கத் தொடங்கிவிடுகிறது.
பல விதத்தில் நுட்பமாக கழிவுகள் தேங்கினாலும் அதில்முதன்மையானதும், முக்கியமானதும்தோல்களில் கழிவுகள் தேங்கி மெல்ல மெல்ல வியர்வைச் சுரப்பிகள் அடைபட்டுவிடுவதாகும். இதனால் காற்றோட்டமும், வெப்பவோட்டமும், உடலுக்குள் வந்து போகும் இதர ஆற்றல்களும் தடைபட்டுவிடுகிறது.
நாசித் துவாரத்தின் மூலம் மட்டுமே பிராணவாயுவை கிரஹித்துக் கொள்வதாக நாம் பொதுவாக எண்ணியிருக்கிறோம். வாஸ்தவத்தில் உடல் முழுவதும் நுண்ணிய மூச்சுத்துவாரங்கள்(Pores) உண்டு. மொத்த உடலும் ஒவ்வொரு கணமும் சுவாசித்துக்கொண்டிருக்கிறது.உடலின் இந்த நுண் துளைகள் புறத்திலிருந்து ஆற்றல்களை உள்ளிழுத்துக் கொள்வதோடல்லாமல் கழிவுகளை கணந்தோறும் வெளித் தள்ளிக் கொண்டிருக்கிறது.
இயல்பான உடல் உழைப்பு இல்லாமல் போகும் தருணத்தில், அல்லது உழைப்புக்கு ஏற்றவாறு உணவை எடுத்துக் கொள்ளும் விழிப்பைத் தவறவிடும் பட்சத்தில், உயிராற்றல் மட்டுப்பட்டு வெப்பம் குறைந்து போய், கழிவுகளை வெளித் தள்ள இயலாமல் தோல்களின் நுண் துளைகள் அடைபட்டு கழிவுகள் தேங்கத் துவங்கிவிடுகிறது.
அதைத் தொடர்ந்து உடல் முழுவதும் சுவாசித்துக் கொண்டிருக்கும், கழிவுகளை வெளியேற்றும் துவாரங்கள் அனைத்தும் அடைபட்டு விடுகின்றன.
இதனால் நம்முடைய மொத்த உடலாற்றலும் அடைபட்டிருக்கும் கழிவுகளை வெளியேற்றும் முயற்சியில் முட்டி மோதிப் போராடத் துவங்க, உடலின் இதர முக்கிய உறுப்புக்களுக்கு ஆற்றல் போதாமல் அவைகள் பலவீனமாகி நோய் எதிர்ப்புச் சக்தியை இழக்கத் தொடங்குகிறது. தொடர்ந்து பலதரப்பட்ட நோய்கள் உடலை வியாபிக்கத் துவங்குகிறது.
இந்தச் செயல்முறை நுட்பமாகவும் , மெதுவாகவும் நடப்பதால் கழிவுகளின் தேக்கம் மற்றும் அதன்மூலம் வியாதிகள் நம்மை ஆட்கொள்வதின் பிரக்ஞையே இருப்பதில்லை. இதுமுற்றிப் போய் நாட்பட்ட வியாதியாக மாறும்போதே அதை அறிந்து கொள்ள இயலுகிறது.
“கழிவு நீக்கம்”
இப்போது இலை மற்றும் மண் குளியலின் கழிவு நீக்க சூட்சுமத்திற்கு வருவோம்.
இந்த சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முந்தைய இரவே , பழங்கள் அல்லது கஞ்சி போன்ற நீராகரங்களை எடுத்துக் கொள்வது நல்லது. காலையிலும் அதைத் தொடரவேண்டும். அதன் பின் பாட்டிலில் சுமார் ஒன்றரை லிட்டர் நீர் நிரப்பிக் கொண்டு மெல்ல மெல்ல சுவைத்துக் குடித்துக் கொண்டே இருக்கவேண்டும். வேகமாகக் குடித்தால் அது சிறுநீராக வெளியேறிக் கொண்டே இருக்கும்.மெல்ல சப்பிக் குடிப்பதால் உடல்முழுவதும் நீர் நிரம்பத் துவங்குகிறது.
அதன்பின், காலை சுமார் பத்து அல்லது பதினொரு மணிக்கு, சூரியன் சுள்ளென்று உச்சிக்கு வரும் சமயம் தரையில் படுத்துக் கொண்டு பிறரின் உதவியோடு உடல் முழுவதும் ஒரு இடைவெளி இல்லாமல் வாழை இலையில் கட்டி (மூச்சு விடுவதற்கு மட்டும் மூக்கில் ஓட்டை போட்டுக் கொள்ளலாம்) வெயிலில் காய வேண்டும்.
நேரம் செல்ல செல்ல வெப்பம் கூடிப் போய் குபு குபுவென்று உடல் வியர்த்துக் கொட்டத் துவங்கும்.இயற்கையான நீராவி வெப்ப அழுத்தத்தால் தோல்கள் மென்மையாகி நுண்துளைகள் திறக்கத் துவங்கும்.
இச்சமயம் உடல் முழுவதும் தேங்கியிருக்கும் மற்றும் நாம் குடித்திருந்த நீர்… நுண் துளைகள் மூலமாக வியர்வையாகப் பிய்த்துக் கொண்டு நாட்பட்ட கழிவுகள் அனைத்தையும் தள்ளிக் கொண்டு வெளியேறும்.உடலின் எல்லா நுண் துளைகளும் திறந்துகொண்டு, உடல் முழு மூச்சாக சுவாசிக்கத் தொடங்கும்.
இப்போது கழிவுகளை வெளியேற்றப் போராடிக் கொண்டிருந்த நம்முடைய ஆற்றல்கள் தங்களுடைய நீண்ட கால போராட்டத்தைக் கைவிட்டு அவையனைத்தும் உடலின் இதர பாகங்களுக்குச் செலுத்தப்படும். இவ்வளவு நாள் மங்கிக் கிடந்த உயிராற்றல் வீரியமாக உறுப்புக்களை உயிரோட்டமாக்கும்,
அந்தக் கணத்திலிருந்தே நோயெதிர்ப்புச் சக்தி உசுப்பப்பட்டு பழைய வியாதிகளை செப்பனிடத் தொடங்கிவிடும்.
இதைத்தான் நாட்பட்ட நோய்கள் குணமாக வாய்ப்புண்டு எனப் பெரியோர்கள் கணித்திருக்கின்றனர்.
இது மண் மற்றும் இலைக் குளியல் இரண்டுக்கும் பொருந்தும். சாதாரண நீராவிக் குளியல் போல் அல்லாமல் இதில் வாழையிலையில் உள்ள பாலிபினோல் போன்ற இயற்கையான நன்மைபயக்கும் ஆண்டிஆசிடன்ட்கள் உடலுக்குள் செல்கிறது. மண் குளியலிலும் இவ்வாறே, புற்று மண் மற்றும் ஆழமாகக் குழித்தெடுக்கப்பட்ட ஆற்றுக் களிமண் போன்றவைகளின் அடிப்படைச் சத்துக்கள், ஊட்டங்கள் உடலுக்குள் கிரஹிக்கப்பட்டு எண்ணற்ற நன்மையை விளைவிக்கின்றன.
மற்றபடி இதன் பலன்கள் என்று நான் வரிசையாகப் பட்டியலிடப் போவததில்லை. அதெல்லாம் இணையத் தேடல் தளங்களில் சற்றே மிகைப்படுத்தலோடு (ஆத்மஞானம் பெறலாம் என்கின்ற அளவில்) ஏராளமாகக் குவிந்திருக்கின்றன.
இது சுய அனுபவத்தில் நான் கண்ட அடிப்படைத்தத்துவம் மட்டுமே.
சத் தர்ஷணத்தின் சிறுவாணி ஆற்றங்கரையில் இந்தப் புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம்.
இரா. ஆனந்தக் குமார்